Our Feeds


Saturday, June 17, 2023

Anonymous

பொதுமக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள மிக மிக முக்கியமான அறிவிப்பு

 



(எம்.வை.எம்.சியாம்)


சமூக வலைத்தளங்களினூடாக 108 பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 75 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மேலும், சமூக வலைத்தளங்களினூடாக பண மோசடி சம்பவங்கள் அதிகம் பதிவாகும் நிலையில் தமது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி. ஜெயநெத்சிறி தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (16) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் சம்பவங்கள் நாட்டில் தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. 

இவ்வருடம் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் பதிவாகிய இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 108 ஆகும். கடந்த இரண்டரை வருடங்களில் இணைய குற்றங்கள் தொடர்பில் 9,000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

கொவிட் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. 

அதன்படி, 2021ஆம் ஆண்டு இணைய குற்றங்கள் தொடர்பாக 4,688 முறைப்பாடுகளும், 2022ஆம் ஆண்டில் 3,168 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன.

இவ்வருட காலப்பகுதியில் 1,187 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளில் 75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மேலும், சமூக வலைத்தளங்களினூடாக பண மோசடி சம்பவங்கள் அதிகம் பதிவாகும் நிலையில் தமது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம். அவ்வாறு வழங்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »