தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய 05 உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் கூடிய அரசியலமைப்பு சபை, தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்தது.
அதன்படி, அதன் தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி பெரேரா, முன்னாள் சட்ட ஆலோசகர் ஜனாதிபதியின் சட்டத்தரணி தீபானி குமாரஜீவ, சட்டத்தரணி அமீர் பைஸ் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் தொடர்பான கலாநிதி ரமேஷ் ராமசாமி ஆகியோரின் பெயர்களும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முன்மொழியப்பட்டுள்ளன.
இவர்களது பதவிக்காலம் உரிய முன்மொழிவுகள் தொடர்பில் ஜனாதிபதியின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் 05 வருட காலத்திற்கு அமுலில் இருக்கும்.