(நா.தனுஜா)
சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் எதிர்வரும் வாரம் சீனா செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி , இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து சீன அரசாங்கத்துடன் விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை பூர்த்திசெய்யவேண்டியுள்ள நிலையில், அதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வினவியபோதே அமைச்சர் அலி சப்ரி மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
கடன் மறுசீரமைப்பு செயன்முறையை பொறுத்தமட்டில் நான்கு பிரதான தரப்பினர் உள்ளனர். அவர்களில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச பலதரப்பு பங்காளிகளிடம் பெற்ற கடன்களை தொடர்ந்து செலுத்திவருகின்றோம். அதனைத் தவிர்க்க முடியாது.
இரண்டாவதாக சர்வதேச இருதரப்புக் கடன்வழங்குனர்கள் என்ற ரீதியில் நாடுகளிடம் பெற்ற கடன்களை மறுசீரமைப்பதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தபட்டிருப்பதுடன், அதில் சீன கண்காணிப்பாளராக செயற்படுகின்றது.
மூன்றாவது தரப்பினர் சர்வதேச பிணைமுறி பங்குதாரர்களாகிய வர்த்தக கடன்வழங்குனர்களாவர். அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதுடன், அதில் கைச்சாத்திடும் நிலைக்கு வந்திருக்கின்றோம். நான்காவது தரப்பினரான உள்ளகக் கடன்வழங்குனர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியம் எமக்கு கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான செயற்திட்டமொன்றை வழங்கியிருக்கின்றது.
அச்செயற்திட்டத்தின் பிரகாரம் கடன் ஸ்திரத்தன்மையை அடைந்துகொள்வதற்கு 17 பில்லியன் டொலர் உட்பாய்ச்சல் அவசியமாகின்றது. இதனை அடிப்படையாகக்கொண்டே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
எனவே இறுதியாக சீனா எமக்கு ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்வரும் வாரம் நான் சீனா செல்கின்றேன். அங்கு நடைபெறவுள்ள பொருளாதார கூட்டமொன்றில் பங்கேற்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இருதரப்பு விடயங்கள் குறித்துப் பேசுவதற்காக சீன அரசாங்கமும் அழைப்புவிடுத்துள்ளது. எனவே இதன்போது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேடமாகப் பேசுவோம். சீனா எம்மைக் கைவிடாது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.