Our Feeds


Monday, June 19, 2023

Anonymous

ஈஸ்டர் தாக்குதல் பழியை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த முயற்சிக்கிறார்கள் - விரைவில் புதிய அணியாக ஆட்சியை பொறுப்பேற்போம்.

 



(இராஜதுரை ஹஷான்)


ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பழியை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். ஆகவே குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி உண்மையை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எஹலியகொட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அரசியல் இலாபம் அடைவதை ஒரு தரப்பினர் பிரதான அரசியல் கொள்கையாக கொண்டுள்ளார்கள்.

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ராஜபக்ஷர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பழியை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். ஆகவே குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவுப்படுத்தி நாட்டு மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்தப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.

ராஜபக்ஷர்கள் நாட்டை அழித்து ஆட்சிக்கு வரவில்லை நாட்டை பாதுகாத்து ஆட்சிக்கு வந்தார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த ஒரு சில தீர்மானங்களால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

பொருளாதார பாதிப்பை அரசாங்கத்துக்குள் இருந்தவர்கள் அரசியல் நெருக்கடியாக்கினார்கள். ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாட்டை அழிப்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினோம்.

அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள். வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியை பொறுப்பேற்போம். ஆகவே தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »