Our Feeds


Thursday, June 15, 2023

Anonymous

முஸ்லிம் அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்காத ஐரோப்பிய நாடுகள் - ஐ.நா கவலை!

 



உலகெங்கிலும் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 110 மில்லியனை எட்டியுள்ளது. உக்ரைன் மற்றும் சூடானில் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) தெரிவித்துள்ளது.

அகதிகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டு 108.4 மில்லியன் என்று இருந்த இந்த எண்ணிக்கை இவ்வருடம் 110 மில்லியன்களை எட்டியுள்ளது.

சூடானில் கடந்த 8 வாரங்களாக நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக இந்த எண்னிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஐ.நா அகதிகளின் அமைப்பின் தலைவர் பிலிப்போ கிராண்டி கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த எண்ணிக்கையில் தங்கள் சொந்த நாடுகளுக்குள்ளேயே பாதுகாப்பைத் தேடுபவர்கள் மற்றும் எல்லைகளைத் தாண்டியவர்களும் அடங்குவர். அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் சுமார் 37.5 சதவிகிதம் ஆங்கரித்துள்ளதாக அறிக்கை காட்டுகின்றது.

2011 இல் சிரியா மோதலுக்கு முன்பு, சுமார் 40 மில்லியன் அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் இருந்தனர், இந்த எண்ணிக்கை சுமார் 20 ஆண்டுகளாக நிலையானதாக இருந்தது என்று குறித்த அமைப்பு கூறியுள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதால் தற்பொழுது 110 மில்லியன்களை எட்டியுள்ளது.

மோதல், துன்புறுத்தல், பாகுபாடு, வன்முறை மற்றும் காலநிலை மாற்றம் – இன்னும் அதிகளவான இடம்பெயர பொதுவான காரணங்கள் என கிராண்டி மேலும் கூறியுள்ளார்.

சர்வதேச பாதுகாப்பு கோருகின்றவர்கள் மற்றும் அகதிகளின் பட்டியலில் இருக்கும் அதிகமானவர்கள் சிரியா, உக்ரைன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அறிக்கை கூறுகிறது.

2022ம் ஆண்டின் இறுதியில், 11.6 மில்லியன் உக்ரேனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர், அதில் 5.9 மில்லியன் அவர்களின் நாட்டிலும் 5.7 மில்லியன் வெளிநாட்டிலும் உள்ளதாக கூறப்படுகின்றது.

அகதிகளை அனுமதிப்பது மற்றும் அவர்களுக்கு உதவுகின்ற விடயத்தில் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்திய நாடுகள் குறித்து அகதிகள் தொடர்பான தலைவர் கிராண்டி கவலை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளான போலந்து மற்றும் ஹங்கேரி, முக்கியமாக மத்திய கிழக்கு முஸ்லிம் அகதிகள் மற்றும் வட ஆபிரிக்காவிலிருந்து யாரையும் நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை. அதே நேரம் அகதிகளுக்கு எதிரான கருத்துக்களை குறித்த இரு நாடுகளும் விதைத்து வருகின்றன.

இந்த அகதிகள் குறித்தும் அவர்களின் வாழ்க்கை குறித்தும் சகல நாடுகளும் அக்கறை செலுத்த வேண்டும் கிராண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »