சிவலிங்கம் சிவகுமாரன்
சர்வதேச தந்தையர் தினம் கடந்த 18ம் திகதி உலகெங்கினும் அனுஷ்டிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில், தந்தையின் வகிபாகம், அர்ப்பணிப்பு, தியாகம் போன்ற விடயங்கள் பற்றி அன்றைய தினம் ஊடகங்கள் பல விடயங்களை வெளிப்படுத்தியிருந்தன.
எனினும், குடும்பத்தலைவர்கள் என்ற பொறுப்பை தாங்கி நிற்கும் அனைத்து தந்தையர்களும் தமது கடமையை சரிவர செய்கின்றார்களா, அவர்களின் மறுபக்கம் என்ன, சிலரின் செயற்பாடுகளால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து ஒரு ஆங்கில ஊடகம் புள்ளி விபரங்களுடன் சில தகவல்களை வெளியிட்டிருந்தது.
முக்கியமாக இலங்கையின் பல பாகங்களிலும் வாழ்ந்து வரும் இந்த குடும்பத் தலைவர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்பான தந்தையர்களாகவும் மனைவிமாருக்கு சிறந்த கணவர்களாகவும் செயற்படுகின்றார்களா என்ற கேள்வி முக்கியமானது. தந்தையர் தினத்தின் முக்கியத்துவமானது இன்று வணிகமயமாக்கப்பட்டு, அது அனுஷ்டிக்கப்படுவதற்கான உயர்ந்த இலட்சியங்களைப் பற்றி சமகாலத்தவர்கள், குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் அறியாதவர்களாக உள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எமது நாட்டில் இக்காலத்தில், தந்தையர் தினமானது சிறப்பு வணிகக் குறியீடுகளின் பொருட்கள் விற்பனையாகவும் தந்தையர் தின போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு பரிசுகள் வழங்கும் உயர்ரக விருந்தகங்களுடன் இணைந்ததாகவும் உள்ளன.
இது பொருத்தமான செயற்பாடா என்று தெரியவில்லை. ஏனென்றால் இன்று தந்தையர் தினம் மாத்திரமின்றி அன்னையர் தினம், சிறுவர் தினங்களும் அவ்வாறே வணிக நோக்கத்துக்காக கொண்டாடப்படும் நிகழ்வுகளாகி விட்டன. ஆனால் நாம் சற்று அவதானமாக ஏனைய சம்பவங்களை கவனித்துப் பார்ப்பவர்களாக இருந்தால் குடும்பத்தலைவர்களாக இருக்கும் தந்தையர் எத்தனைப் பேர் மது அருந்துபவர்களாக உள்ளனர் என்ற உண்மை தெரியவரும்.
எமது நாட்டில் சராசரியாக ஒன்பது மில்லியன், அதாவது 90 இலட்சம் பேர் மது அருந்துகிறார்கள். இது மொத்த சனத்தொகையில் 40% ஆகும். இத்தொகையில் 99% ஆண்கள் என்பது முக்கிய விடயம். இதில் தினமும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 இலட்சமாகும். இதில் மதுசாரம், பியர், கசிப்பு என்பன அடங்குகின்றன. 2013 ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின் படி தோட்டப்பிரதேசத்தில் மதுபானங்களுக்காக தமது வருமானத்தின் 40 வீதத்தை தொழிலாளர்கள் செலவளிக்கின்றனராம்.
இப்பகுதிகளில் அதிக மதுபானசாலைகள் இருப்பதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதன் மறுபக்கம் வேதனையானது. அரசாங்கத்தின் உதவியுடன் இயங்கும் சுமித்ரயோ என்ற தொண்டு நிறுவனத்தின் புள்ளி விபரங்களின் படி, பெருந்தோட்டப் பிரதேசங்களில் ஒவ்வொரு பத்து சிறுவர்களில் ஒருவர் தமது வீட்டில் மது பாவனை காரணமாக ஏற்படும் வறுமையால் பாடசாலையிலிருந்து இடை விலகி வருகின்றார்.
இந்த பிள்ளைகளுக்கு மூன்று வேளை சரியான உணவு கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உணவே கிடைக்காமலிருக்கும் போது எங்ஙனம் இவர்கள் பாடசாலைக்குச் செல்வர்? அந்த குடும்பத்தின் தந்தையானவர் தனது பிள்ளைக்கு ஒரு வேளை உணவைக் கூட வழங்காது இருப்பது அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையாகும்.
மதுபானம் மாத்திரமில்லை, புகைத்தலும் இங்கு பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. மதுசாரம் மற்றும் புகையிலைக்கான தேசிய அதிகாரசபையின் (NATA) புள்ளிவிபரங்களின் படி, 300 பேர் கொண்ட ஒரு கிராமத்தில் மதுபானம் மற்றும் புகைத்தலுக்காக மாதாந்தம் நான்கு இலட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகின்றதாம். ஆகவே மதுபானத்துக்காக அதிகம் செலவழிக்கும் மக்கள் கொண்ட பிரதேசம் பெருந்தோட்டப்பகுதியாக மாத்திரம் இல்லை என்பது புலனாகின்றது.
மதுபானம் அருந்துதல் என்பது எமது நாட்டில் மிக வேகமாக பரவி வரும் ஒரு விடயமாக மாறியுள்ளது. இதன் மூலம் அப்பாக்களும் அம்மாக்களும் தமது பிள்ளைகளை வேகமாக தோல்விகளில் தள்ளி விடுகின்றனர். ‘சிறந்த தந்தையாக இருந்ததற்கும் என்னை பாதுகாத்ததற்கும் நன்றி அப்பா ‘ என ஒரு பிள்ளை பேசும் விளம்பரம் உண்மையில் அறிவுபூர்வமானதா? அப்படியானால் ஒரு அப்பாவின் கடமை தான் என்ன?
சோகமான விடயம் என்னவென்றால் எமது நாட்டில் இப்போது பெண்களும் மது பாவனையால் ஆறுதலையும் அமைதியையும் தேட முனைகின்றனர். இதற்கு அவர்களின் துணைகளும் காரணமாகின்றனர். சிறந்த தந்தை என்ற பாத்திரம் பிள்ளைகளுக்கு மாத்திரமில்லை, அது தனது துணைக்கும் தான் என்பதை இவர்கள் உணர வேண்டும். மதுவுக்கு அடிமையான தந்தைமார் எங்ஙனம் தனது பிள்ளைக்கும் துணைக்கும் பாதுகாப்பை வழங்க முடியும்? சிந்தியுங்கள்.