உலகின் மிகப்பெரிய ஐபோனை மேத்யூ பீம் எனும் யூடியூபர் வடிவமைத்துள்ளார். இந்தப் பணியில் அவரது குழுவினர் அவருக்கு உதவியுள்ளனர். ஐஓஎஸ் அம்சங்களுடன் 8 அடி அளவில் இந்த ஐபோனை அவர் வடிவமைத்துள்ளார்.
தற்போது சந்தையில் கிடைக்கும் ஐபோன்களில் 6.7 இன்ச் கொண்ட ஐபோன் புரோ மேக்ஸ் மாடல் போன்கள் தான் ஆப்பிள் நிறுவன தயாரிப்பின் பெரிய போன்களாக உள்ளன. ஆப்பிள் தரப்பில் மினி சைஸ் போன்களுக்கு கடந்த ஆண்டு ஐபோன் 14 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதே விடை கொடுக்கப்பட்டது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய ஐபோனை மேத்யூ பீம் வடிவமைத்துள்ளார். இவர் கடந்த 2020-ல் 6 அடி அளவில் ஐபோனை வடிவமைத்திருந்தார். தற்போது அதனை அவரே தாகர்த்துள்ளார்.
வழக்கமாக ஐபோன்களில் அதன் பயனர்கள் மேற்கொள்ளும் அனைத்தும் பணிகளையும் இந்த 8 அடி ஐபோனிலும் செய்யலாம். போட்டோ எடுப்பது, ஆப்பிள் பே மூலம் பணம் அனுப்புவது, கேம் விளையாடுவது, பல்வேறு செயலிகளையும் இதில் பயன்படுத்தலாம். இதனை ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போன் குறித்து மக்களின் ரியாக்ஷனை பெற நியூயார்க் நகர வீதியில் கொண்டு சென்றுள்ளார். அதனை தனது யூடியூப் தளத்தில் பீம் பகிர்ந்துள்ளார். அப்போது முக்கிய இடங்களின் படங்களை அவர் க்ளிக் செய்துள்ளார். இந்த போனை பிரபல டெக் ரிவ்யூ யூடியூபர் எம்கேபிஹெச்டி ரிவ்யூ செய்துள்ளார்.