அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (27) அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே சார்பில் ஆஜரான சட்ட மா அதிபர், அமைச்சின் தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக குறைக்கும் அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
176 வைத்தியர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி எம்.ஏ.ஆர்.மரிக்கார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜூன் 30 ஆம் திகதிக்குள் பிரேரணையின் மூலம் நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.