கண்டியில் இருந்து எம்பிட்டிய நோக்கி பயணித்த பஸ்ஸில் பெண்ணொருவரின் தங்க நகையை அபகரித்த மூன்று இளம்பெண்கள் கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று யுவதிகளும் கண்டியிலிருந்த எம்பிட்டிய நோக்கி சென்ற பஸ்ஸில் ஏறி, ரது பொக்குவ சந்தி பகுதிக்கு வருவதற்கு இரண்டு கிலோமீற்றர் முன்னதாக, குறித்த பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவர் கழுத்தில் தங்க நகை இல்லாததைக் கண்டு, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், பஸ்ஸில் சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட்ட போது, யுவதி ஒருவரின் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க சங்கிலியை கண்டெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பஸ்ஸில் பயணித்த 18-22 வயதுடைய மூன்று யுவதிகள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், திருகோணமலை மற்றும் கிரேண்ட்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸாரிடமிருந்தும் இவர்கள் குறித்த தகவல் அறிக்கை கோரப்பட்டுள்ளது.