Our Feeds


Tuesday, June 27, 2023

ShortNews Admin

38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு – ஹங்குரன்கெத்தவில் நடந்தது என்ன?



நுவரெலியா – ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை நேற்று (26) இரவு 200 இற்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்ததையடுத்து பொலிஸார் எச்சரிக்கைக்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஹங்குரன்கெத்த தியதிலகபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

 

இச் சம்பவம் தொடர்பில் ஹங்குராங்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

 

எனினும், இச்சம்பவம் கொலை என்றும், சந்தேக நபர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்த பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.


குறிப்பிட்ட மரணம் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்ட போதிலும், குழு ஒன்று ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், பணியில் இருந்த அதிகாரிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, நிலைமையைக் கட்டுப்படுத்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 8 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »