Our Feeds


Monday, June 26, 2023

ShortNews Admin

200 டெங்கு மரணங்கள் பதிவு : கொழும்பில் முப்படையினர் ஒத்துழைப்புடன் விசேட தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் - சீதா அரம்பேபொல



(எம்.மனோசித்ரா)


டெங்கு நோய் காரணமாக இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 200 மரணங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் அதிக அபாயம் மிக்க வலயமாக இனங்காணப்பட்டுள்ளமையால் முப்படையினரின் ஒத்துழைப்புடன் இவ்வாரம் கொழும்பில் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 200 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. 2017 - 2019க்கு இடைப்பட்ட காலத்தில் பதிவானதை விட அதிகளவான டெங்கு நோயாளர்கள் சுமார் 6 மாத காலப்பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகின்றமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே விசேட அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது. 

தற்போது அக்குழுவினால் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காலநிலை மாற்றத்துக்கேற்ப ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோய் பரவும் வீதம் சடுதியாக அதிகரிக்கும். இந்நிலைமையைக் கட்டுபடுத்துவதற்காக 9 மாகாணங்களிலும் 9 டெங்கு ஒழிப்பு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்த டெங்கு நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். குறிப்பாக மேல் மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிக அபாயமுடைய மாவட்டங்களாகவுள்ளன.

இவை தவிர மத்திய , தென் , வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அடுத்தடுத்த கட்டங்களில் உள்ளன. டெங்கு நோய் பரவல் தீவிரமடைவதற்கு தொடர்ந்தும் இடமளிக்கப்படக் கூடாது என்பதற்காக இவ்வாரம் விசேட வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டு;ள்ளது.

அதற்கமைய இவ்வார இறுதியில் முப்படையினரின் ஒத்துழைப்புடன் கொழும்பில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. கொழும்பு மாவட்டத்திலுள்ள சகல சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் ஊடாக இது தொடர்பில் மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்படும்.

இது தவிர கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் விசேட பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. டெங்கு நோய் மாத்திரமின்றி சகல மருத்துவ தேவைகளிலும் வைத்தியர்கள் பற்றாக்குறை தாக்கம் செலுத்தும். எனவே நாட்டில் நிலவும் விசேட வைத்திய நிபுணர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் மரணங்களை தடுக்க முடியாத நிலைமை ஏற்படும். எனவே பாடசாலைகளிலும் அவற்றை அண்மித்த பகுதிகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »