சமூக நீதிக்கட்சியின் முதலாவது தேசிய பேராளர் மாநாடு 13.05.2023 அன்று கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சமூக நீதிக்கட்சியின் தலைவர் நஜா முஹம்மதின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க, நோக்கவுரையாளராக (Keynote Speech) கொழும்புப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி, கௌரவ அதிதிகளாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க மற்றும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மாநாட்டின் வரவேற்புரையை கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் நிகழ்த்தினார்.
கட்சியின் தலைவர் நஜா முஹம்மத், கட்சியின் உருவாக்கத்தின் நோக்கம், பின்னணி மற்றும் கட்சி சமூகத்தில் ஏற்படுத்த இருக்கும் மாற்றங்கள் என்பன குறித்து தனது தலைமை உரையில் விளக்கினார்.
சமூக நீதிக் கட்சி எவ்வாறான அரசியலைச் செய்ய விழைகிறது என்பதை கட்சியின் இளம் உறுப்பினர் அஸ்லம் அஹ்மத் இப்றாஹீம் தனது உணர்வுபூர்வமான கவிதை வரிகளினால் பதிவுசெய்தார். கட்சியின் பிரதித் தலைவர் ரிஸானா சிமாஸ் அரசியலில் பெண்களின் வகிபாகம் குறித்தும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான நல்ல சூழல் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்ற, அதிதிகள் அமர்வின் முடிவுரையை கட்சியின் பொதுச் செயலாளர் சிராஜ் மஸ்ஹூர் நிகழ்த்தினார்.
மாநாட்டு நிகழ்வுகளை சிங்கள மொழியில் ஜாவித் முனவ்வரும் தமிழ் மொழியில் நஸ்ரின் நவாஸும் நெறிப்படுத்தினர்.
மாநாட்டில் சமூக நீதிக்கான இளைஞர் முன்னணி, சட்டக்கல்லூரி மாணவன் ரஷாத் அஹமத்தினாலும், சமூக நீதிக்கான கற்கை மையம், கட்சியின் ஊடக செயலாளர், சட்டக்கல்லூரி மாணவன் அர்க்கம் முனீரினாலும் அறிமுகப்படுத்தப்பட்டன.
2022 பெப்ரவரி 4ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட சமூக நீதிக்கட்சியின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட இம்மாநாட்டில் உள்ளூராட்சி மன்றங்களில் சிறப்பாக மக்கள் சேவையாற்றிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான எம்.ஐ. திஸ்ரினா, எம். சீ. எம். நவ்பர், எம். எம். அப்துல் பரீத், 2022/2023 ஆண்டுக்கான கட்சியின் சிறந்த உறுப்பினராக மௌலவி ஏ.எச்.எம். பசீர் ஆகியோர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கட்சியின் சிறந்த கிளையாக மருதமுனை கிளை தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
மாநாட்டின் தீர்மானங்கள் கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் ரிப்கான் ரபாய்தீனினால் பிரகடனப்படுத்தப்பட்டு கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டன.
அதிதிகள் அமர்வு, உறுப்பினர்கள் அமர்வு என்று இரு அமர்வுகளாக இடம்பெற்ற இம்மாநாட்டில் அதிதிகள் அமர்வில் உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக, சன்மார்க்க மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
உறுப்பினர்கள் அமர்வில் கட்சி உறுப்பினர்களுடனாக திறந்த கலந்துரையாடல், கட்சியின் அமைப்புச் சட்ட அறிமுகம் அங்கீகரித்தல், கட்சியின் கொள்கை வழிகாட்டல் தத்துவங்களை அங்கீகரித்தல், கட்டமைப்பு அறிமுகம் தலைமைத்துவ சபைத் தெரிவு போன்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
பேராளர் மாநாட்டிற்கு கட்சி அங்கத்தவர்கள் அம்பாரை, திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, புத்தளம், காலி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து வருகை தந்திருந்தனர்.