எந்தவொரு மாற்றுக் கருத்துமில்லாமல் இஸ்லாம் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளதை போல சிறுவர் துஷ்பிரயோகம் அதே போல் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் அதை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. என பிரபல சிங்கள சினிமா நடிகை உபேக்ஷா சுவர்ணமாலி Youtube தளமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நான் குவைட் நாட்டில் பிறந்து வளர்ந்தவள் என்ற வகையில் நானும் எனது தாயும் அந்த பாதுகாப்பை அனுபவித்திருக்கிறோம்.
நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் மரண தண்டனையை சட்டமாக்கி நடைமுறைப்படுத்துவேன் எனக்கூறித் தான் ஆட்சிக்கு வந்தார். இறுதியில் அவர் பதவிக் காலம் முடிந்து செல்லும் போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஒருவரை விடுதலை செய்து விட்டு சென்றார்.
நூற்றுக்கு இறுநூறு முறை நிரூபிக்கப்பட்ட பின் கண்டிப்பாக சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். என்பதில் உறுதியாக இருக்கிறேன். மத்திய கிழக்கு அரபு நாடுகளில் அப்படியான தண்டனைகள் வழங்கப்படுவதினால் தான் அங்கு இந்த குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த குற்றவாளிகள் அப்பாவிகளாகவும் இருக்கலாம் தானே என சில சட்டத்தரணிகள் வாதிடுகிறார்கள். அதனால் தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என கூறுகிறார்கள். குற்றவாளிகளுக்கு பரிதாபப்படுவதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்காக பரிதாபப்பட வேண்டும்.
இந்தக் குற்றம் தினமும் அதிகரித்துக் கொண்டே வருவதை பார்க்கிறோம். அத்துடன் தாய் தந்தையருக்கு மாத்திரம் குழந்தைகளை பாதுகாக்க முடியாது. இந்த சமூக மட்டத்தில் நம் அனைவருக்கும் பொறுப்பிருக்கிறது. குறிப்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவோருக்கு நிறைய பொறுப்பிருக்கிறது.
சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாமையினால் தான் இந்தக் குற்றங்கள் அதிகரிக்கின்றன. பெற்றோருக்கு மாத்திரம் குறை கூற முடியாது.