Our Feeds


Wednesday, May 10, 2023

ShortNews Admin

VIDEO: பேச்சுவார்த்தையை ஜனாதிபதி தேர்தல் வரை இழுத்தடிக்க ஜனாதிபதி முயற்சித்தால் அவரது நோக்கம் வெற்றி பெறாது. - சாணக்கியன் MP காட்டம்



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


அரசியல் தீர்வுக்காகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.

ஆகவே ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறும் பேச்சுவார்த்தையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ்  அரசியல்வாதிகள் கலந்துக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் வலியுறுத்தினார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகார பேச்சுவார்த்தையை ஜனாதிபதி தேர்தல் வரை இழுத்தடிக்க ஜனாதிபதி முயற்சித்தால் அவரது நோக்கம் வெற்றி பெறாது.

தமிழ் மக்களும் அவருக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள். எம்மை ஏமாற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி பதவியை சிறந்த முறையில் வகிக்கவும் முடியாது எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு தொடர்ந்து ஆணை வழங்கி வருகிறார்கள்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விடுக்கப்படும் சகல அழைப்புக்களின் போதும் வெளிப்படை தன்மையுடனும், எதிர்பார்ப்புடனும் கூட்டங்களில் கலந்துக் கொள்கிறோம்.

75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் சிறந்த தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எமது தலைவர் இரா.சம்பந்தன் இதயசுத்தியுடன் கலந்துக் கொண்டார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று ஒவ்வொரு முறையும் அழைப்பு விடுக்கும் போது அதனை  புறக்கணிக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொண்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் அரசியல்வாதிகளை தனித்தனியாக சந்திக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் மத்தியில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் காணப்பட்டன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை வேறுப்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம். இதனை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளை ஒன்றாக சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

இதற்கமைய இன்றைய தினம்  காணி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது,நாளை மற்றும் நாளை மறுதினம் அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது..

இனப்பிரச்சினைக்கு தீர்வு, அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு ஆகியவற்றுக்கு தீர்வு காணும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதனை தமிழ் தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமிழ் தலைமைகளுக்கு தொடர்ந்து ஆணை வழங்குகிறார்கள்.ஆகவே ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் அரசியல்வாதிகள் கலந்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை அரசியல் தீர்வு விவகாரத்தை பேச்சுவார்த்தை ஊடாக முன்னெடுத்து செல்ல ஜனாதிபதி திட்டமிடுவாராயின் அது வெற்றி பெறாது.தமிழ் மக்களின் வாக்குகளும் கிடைக்காது.

தமிழ் மக்களின் ஆதரவினால் மாத்திரம் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாது என்பதை நன்கு அறிவோம்.எங்களை ஏமாற்றி ஜனாதிபதியாக பதவியேற்று முறையாக பதவி வகிக்க முடியாது,சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளவும் முடியாது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »