(எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவின் ஆக்கிரமிப்பில் இருந்து வெளியில் வந்தால் மாத்திரமே அவருடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்கலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றுவந்த மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சம்வங்கள் இடம்பெற்றன. இதன் காரணமாக அரசியல் நெருக்கடியும் இடம்பெற்றது.
கோத்தாபய ராஜபக்ஷ்வின் பதவி விலகலுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். என்றாலும் ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர் அல்ல.
அவர் மொட்டு கூட்டணியின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது எமக்கு காணக்கூடியதாக இருக்கிறது.
என்றாலும் பொதுஜன பெரமுன அரசாங்கத்திலே ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதியாக செயற்படுகிறார். அதனால் அவர் பொதுஜன பெரமுனவின் ஆக்கிரமிப்பிலேயே இருந்து வருகின்றார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதியுடன் இணைந்துசெயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டி இருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவின் பணயக்கைதியாகவே இருக்கிறார்.
அவர் அதில் இருந்திலிருந்து வெயியில் வந்து, எமது கொள்கையுடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டால் அவருடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்கலாம்.
மேலும் நாட்டில் ஸ்திரமான அரசியல் நிலைமையை ஏற்டுபத்த நிச்சயமாக தேர்தல் நடத்தப்படவேண்டும். மக்கள் ஆணையுடனான அரசாங்கம் ஒனறு அமைக்கப்படவேண்டும். எந்த தேர்தலை நடத்தினாலும் அதற்கு நாங்கள் முகம்கொடுக்க தயாராகவே இருக்கிறோம்.
மக்களின் ஜனநாயக உரிமையை யாராலும் புறக்கணிக்க முடியாது. அதனால் நி்ச்சயமாக மக்கள் தேர்தல் ஒன்றுக்கு மிக விரைவாக செல்லவேண்டும் என்றார்.