திருமலை சன்முகாவில் ஆசிரியைகள் ஹபாயா அணியலாம் என இணக்கம் தெரிவித்தமை மகிழ்ச்சி - இது நல்லிணக்கத்தின் சமிஞ்சையாகும் என்கிறார் இம்ரான் எம்.பி.
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு எதிர்காலத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் கூறி நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை இணக்கமாக முடித்துக்கொள்ள விரும்புவதாக சண்முகா வித்தியாலயத்தின் அதிபர் தரப்பானது நீதிமன்றில் முன்மொழிந்தமை மகிழ்ச்சியழிப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இவ்விடயமானது தமிழ் பேசும் மக்களிடையே நல்லதோர் நல்லிணக்கத்திற்கான சமிஞ்சையாக தென்படுவதாகவும் இரு தரப்பாரும் விட்டுக்கொடுப்போடும் இணங்கியும் செல்வதன் மூலம் பலம் பெற முடியும் என்றும் இம்ரான் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு தனது கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில் பாடாசலை அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் அவர்களுக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி இணக்கம் காணப்பட்டுள்ளது.
இது விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கருத்து வெளியிடுகையில், கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் தமிழ், முஸ்லிம், சிங்களும் வாழ்கின்றனர். இங்கு, பல்சமய காலாசாரம் பின்பற்றப்படுகின்றது. எனவே, வெவ்வேறு இன அடையாளத்தை கொண்டவர்களாக இருந்தாலும் சரி, வெவ்வேறு சமயத்தை பின்பற்றினாலும் சரி, நமக்கிடையே புரிந்துணர்வும் சகிப்புத் தன்மையும் காணப்பட வேண்டும்.
திருமலை. சன்முகா ஹபாயா விவகாரமானது ஆரம்பத்திலேயே பேசி தீர்மானமொன்றிக்கு வந்திருக்கலாம். துரதிஸ்டமான சில நடவடிக்கைகள் பல கசப்பான அனுபவங்களை தந்துவிட்டது. மீண்டும், மீண்டும் இவற்றை பேசிக்கொண்டிருப்பதை விடுத்து, நாம் இணக்கமாக அடுத்த கட்டத்துக்கு செல்வது பற்றி சிந்திக்க வேண்டும்.
அத்தோடு, ஆசிரியை பஹ்மிதா தமது உரிமைக்காக நீண்ட நாட்கள் போராடினார். அவரை பாராட்டமல் இருக்க முடியாது. அத்தோடு, இவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மற்றும் சட்ட ஆலோசகர்களையும் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இவ்வாறு தெரிவித்தார்.