செயற்கை நுண்ணறிவின் கோட்பாதர் என வர்ணிக்கப்படும் கணினியியல் விஞ்ஞானி ஒருவர் கூகுள் நிறுவனத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆபத்து குறித்து பேசுவதற்காக அவர் விலகியுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜெப்ரி ஹின்டன் எனும் இவ்விஞ்ஞானி, செயற்கை நுண்ணறிவு சாதனங்களுக்கான அடிப்படை தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்.
நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் அவர் பேசுகையில், இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் ஆழமான ஆபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
'5 வருடங்களுக்கு முன்னர் அது எப்படி இருந்தது என்பதையும் தற்போது எப்படி உள்ளது என்பதையும் பாருங்கள். இதை மேலும் பரவலாக்குவது பயங்கரமானது' என்கிறார் அவர்.
'தொழில்நுட்ப பெருநிறுவனங்களுக்கு இடையிலான போட்டியானது, புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஆபத்தான வேகத்தில் வெளியிடுவதற்கு நிறுவனங்களைத் தள்ளுகின்றன. இது தொழில்களை ஆபத்துக்குள்ளாக்குவதுடன், தவறான தகவல்களையும் பரப்புகிறது.
தீய நபர்கள், தீய நடவடிக்கைகளுக்காக இதைப் பயன்படுத்துவதை தடுப்பது எப்படி என்பதை அறிவது கடினம்' எனவும் அவர் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல்கள் பரப்பபடும் சாத்தியம் இருப்பதாகவும் ஹிண்டன் எச்சரித்துள்ளார். சராசரி நபர் ஒருவரால், 'எது உண்மை என்பதை இனியும் தெரிந்துகொள்ள முடியாமல்' இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
75 வயதான ஜெப்ரி ஹின்டன், தனது வயதும் இராஜினாமாவுக்கு ஒரு காரணம் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
கூகுளின் செயற்கை நுண்ணறிவுப்பிரிவின் தலைமை விஞ்ஞான ஜெவ் டீன் விடுத்துள்ள அறிக்கையொன்றில், ஜெப்றி ஹின்டனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு கொள்கைகளை வெளியிட்ட முதல் நிறுவனங்களில் ஒன்று என்ற வகையில், செயற்கை நுண்ணறிவை பொறுப்புணர்வுடன் அணுகுவதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். துணிவுடன் புத்தாங்களை மேற்கொள்ளும் அதேNளை, வெளிவரும் ஆபத்துக்களை புரிந்துகொள்வதிலும் நாம் தொடர்ச்சியாக கற்றுக்கொள்கிறோம்' எனவும் ஜெப் டீன் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவில் இயங்கும் 'சட்பொட்' எனும் அரட்டை இயலி மென்பொருட்கள் கடந்த சில மாதங்களில் வேகமாக பிரசித்தமாகி வருகின்றன.
ஓபன்ஏஐ எனும் நிறுவனம் சட்ஜிபிடி எனும் சட்பொட்டை கடந்த நவம்பரில் வெளியிட்டது.
கூகுள் நிறுவனம் பார்ட் எனும் தனது சொந்த சட்பொட்டை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதேவேளை, மேம்படுத்தப்பட்ட ஜிபிடி4 எனும் சட்பொட்டை கடந்த மார்ச் மாதம் ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தகயை சட்பொட்கள் தற்போது மனிதர்களைவிட புத்திகூர்மை கொண்டவையாக இல்லை. ஆனால், விரைவில் மனிதர்களைவிட புத்திகூர்மை கொண்டவையாகிவிடும் என நான் எண்ணுகிறேன் என்கிறார் ஜெப்றி ஹின்டன்.
(சேது)