Our Feeds


Sunday, May 28, 2023

ShortNews Admin

மாகாண சபைத் தேர்தல் சட்டம் : என்னை கடுமையாக விமர்சித்த சுமந்திரனின் தனிநபர் பிரேரணை வரவேற்கத்தக்கது - சரத் என்.சில்வா



(இராஜதுரை ஹஷான்)

புதிய மாகாண சபை சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் என்னை கடுமையாக விமர்சித்தார்.

மாகாண சபைத் தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள பின்னணியில் பழைய மாகாண சபைத் தேர்தலை நடத்த எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையொன்றை கொண்டுவந்துள்ளமை வரவேற்கத்தக்கது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய நூலக சாலையில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தலுக்கு நேர்ந்த கதியே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் நேரிடும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நிதி இல்லை என்று குறிப்பிடும் அரசாங்கம் அமைச்சரவையை விரிவுபடுத்த விசேட கவனம் செலுத்தியுள்ளது.

 அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு முழு உலகத்தையும் வலம் வருகிறார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் இரு அரச தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும். 

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் 2017ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது.

பழைய தேர்தல் முறையில் திருத்தம் செய்யும்  வகையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தின. 

மாகாண சபைத் தேர்தல் புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் என்னை கடுமையாக விமர்சித்தார்.

மாகாண சபைத் தேர்தல் முறைமையில் ஏற்படுத்தும் மாற்றம் மாகாண சபைத் தேர்தலுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை 2017ஆம் ஆண்டு குறிப்பிட்டேன்.

எனது கருத்து தற்போது உண்மையாகியுள்ளது. காலம் கடந்த நிலையில் பழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் தனிநபர் பிரேரணையை கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »