திருகோணமலை சண்முகா வித்தியாலய அபாயா பிரச்சனை - "சமூகத்தின் உரிமைகளை சட்ட ரீதியாக வென்றெடுப்பதற்கு இது ஒரு நல்ல முன்னுதாரணம்" என அக்குரணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாதுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த உரிமை போராட்டாத்தை சட்டரீதியாக வெற்றிகொள்ள முழு மூச்சாகபாடுபட்ட குரல்கள் அமைப்பினருக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியரான ஃபஹ்மிதா ரமீஸ் அவர்கள் பாடசாலைக்கு அபாயா அணிந்து சென்ற விவகாரம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி சமூக ரீதியாகவும் பல்வேறுபட்ட கொதிநிலைகளை இது ஏற்படுத்தி இருந்தமை நாம் அறிந்ததே.
இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் யாப்பில் ஒவ்வொரு சமூகங்களும் அவர்களினது கலாசார தனித்துவங்களை கடைபிடிக்க முடியும் என்கிற அனுமதி இருந்தும் திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் அதன் ஆசிரியைக்கு அபாயா அணிய தடை விதிக்கப்பட்டமை இந்த நாட்டின் சமூகங்களின் கலாசார உரிமையையே கேள்விக்குறியாக்கிய விடயமாகும். இந்த விவகாரம் பல்வேறுபட்ட குழுவினரின் தலையீட்டால் நீதிமன்றம் வரை சென்றது கவலைக்குரிய அம்சமாகும்.
நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் குறித்த ஆசிரியை மற்றும் முஸ்லிம் மாணவிகள் தங்களுடைய அபாயா / ஹிஜாபை கடைபிடிக்கலாம் என்கிற தீர்ப்பை மதிப்புக்குரிய நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது. மேலும் ஃபஹ்மிதா ஆசிரியையின் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த சம்பளப் பணத்தையும் அவருக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஆசிரியை சார்பாக வாதாடி நீதியை பெற்றுத் தந்த சட்டத்தரணி ராஸி முஹம்மத் உட்பட 'குரல்கள்' அமைப்பினருக்கும், இதற்கு பக்கபலமாக நின்ற சமூக அங்கத்தவர்களுக்கும் எனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நீதிமன்றத் தீர்ப்பு சமூகங்களுக்கு இடையேயான ஒற்றுமையையும், சகவாழ்வையும் மேம்படுத்தும் ஒரு தீர்ப்பாக உலகுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.
எதிர்காலங்களிலும் சமூக, கலாசார ரீதியாக உரிமைகளுக்காக வேண்டி சட்ட ரீதியாக போராடுவது என்பதற்கு சண்முகா அபாயா விவகாரத்தில் நாம் பெற்ற வெற்றி ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. இதற்காக வேண்டி உழைத்த 'குரல்கள்' அமைப்பு போல நாட்டின் பல இடங்களிலும் உருவாக வேண்டும் என்பது தான் எமது அவாவாகும். ஒரு சமூகம் உரிமைகளை இழக்கும் போது சட்ட ரீதியாக போராடியே அது தனது உரிமைகளை பெற வேண்டும் என்பதற்கும் இந்த விவகாரம் ஓர் உதாரணம் ஆகும்.
இலங்கை போன்ற பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டில் நாம் ஒவ்வொரு சமூகத்தினரினதும் கலாசார, மத ரீதியான உரிமைகளை நாம் மதித்து நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
ஒரு சமூகத்தின் உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் நாம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து அதனை வெல்ல முடியும் என்பதற்கு ஆசிரியை ஃபஹ்மிதா ரமீஸ் விடயத்தில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒரு பாடமாகும்!