மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் மாலை 6 மணியுடன் நிறைவடைந்து கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் இயக்குனர்களுடன் அவசர கலந்துரையாடல் நேற்று (25) வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்டான்லி டிமெல் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை காலை 11 மணிக்கு பின்னர் ஆரம்பிக்க வேண்டும். கிழமையின் ஏழு நாட்களிலும் மாலை 6 மணியுடன் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும்.பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள் அவசரமாக பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாவிட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் மாணவர்களின் ஒழுக்கம் ஆன்மீகம் போன்றவற்றில் தனியார் கல்வி நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும்.
உரிய இருக்கை வசதி, சுத்தமான குடிநீர், சுகாதாரம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். என தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில் சர்வ மதத் தலைவர்கள், மன்னார் பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், தனியார் கல்வி நிலையங்களின் பிரதிநிதிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(மன்னார் நகர் நிருபர்)