பூமியின் மிகக் குறைந்த ஈர்ப்பு, இலங்கையின் தெற்கு முனையிலும் மாலைதீவுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளிலும் காணப்படுவதாக ஆய்வொன்றில் நாசா கண்டறிந்துள்ளது.
அத்துடன், ஹட்சன் விரிகுடா பகுதியைச் சுற்றியுள்ள வட கனடாவும் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
நாசாவின் கிரேஸ் மிஷன் (ஈர்ப்பு மற்றும் காலநிலை பரிசோதனை) பல ஆண்டுகளாக, மேற்கொண்ட செயற்கைகோள் ஆய்வுகளில் இந்த வேறுபாடுகளை கண்டறிந்துள்ளது.
பூமியின் மேலோட்டத்தினுடைய தடிமன் மற்றும் மேற்பரப்புக்கு அடியில் உள்ள உருகிய பாறை மற்றும் மக்மாவின் அளவு ஆகியவற்றில் வேறுபாடு இருப்பதால், அவை ஈர்ப்பு விசைகளில் மாறுதல்களை உண்டாக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
திரவ மக்மா பகிர்வு மற்றும் கண்ட தட்டுகள் மாறும்போது ஈர்ப்பு விசையின் பரவல் மெதுவாக மாறுகிறது.
வலிமையான புவியீர்ப்பு, பொலிவியா மற்றும் வடக்கு அந்திஸைச் சுற்றி அமைந்துள்ளது.
துருவங்களைச் சுற்றியும், கெர்மடெக் அகழி மற்றும் நியூசிலாந்தின் வடக்குத் தீவின் உச்சியில் எடை அதிகரித்த பகுதி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
உதாரணமாக நியூசிலாந்தில் 68 கிலோ எடையுள்ள ஒருவர், மாலைதீவு அல்லது கனடாவின் ஹட்சன் விரிகுடாவில் இருக்கும்போது 03 கிராம் வரை எடையை இழக்க நேரிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருக்காது. உடல் எடையில் 1/25,000 பகுதியாக இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வரும் சில சுற்றுலாப் பயணிகள், தங்களின் எடையில் வித்தியாசம் இருப்பதாக உணர்கின்றனர். அதில் இந்த ஈர்ப்பு விசை மாற்றமும் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.