பொலன்னறுவையில் உள்ள வறிய கிராமங்களில் இருந்து சிறுவர்களை ஏற்றிச் செல்வதற்காக பொலன்னறுவை டிப்போவிற்கு ஒதுக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவையில் இருந்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன கலந்துகொண்ட கிராமத்தில் நடைபெற்ற வைபவத்தில் இந்த பேருந்து வழங்கப்பட்ட போதிலும், மறுநாள் முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெலிகந்த கல்தலாவ, ரிதிபொகுன, அலுத்வெவ, குண்டமன, நெலும்வெவ மற்றும் பொரவெவ்வ ஆகிய கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்காக இந்தப் பேருந்து ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்திய அரசின் கடனுதவியின் கீழ் 500 பேருந்துகளில் 10 பேருந்துகளை பொலன்னறுவை டிப்போவிற்கு வழங்கிய பின்னர், அதில் ஒன்று வெலிகந்த மற்றும் அளுத்வெவ பிரதேசத்தில் உள்ள ஏழு கிராமங்களில் இருந்து பொலன்னறுவையில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்ல வழங்கப்பட்டது.
கடந்த 10ஆம் திகதி மட்டும் தமது ஏழு கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகளை அந்தப் பேருந்தில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற போதிலும், பிள்ளைகள் அந்தப் பேருந்தில் வீடுகளுக்கு அழைத்து வரப்படாமல் வேறு பேரூந்துகளில் வரவேண்டிய நிலை ஏற்பட்டதாக பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, பொலன்னறுவை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ அத்தியட்சகர் டி.ஏ.பிரேமசிறி இது அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை எனவும், பணியாளர்கள் பற்றாக்குறையால் குறித்த பேருந்தை இயக்க முடியாதுள்ளதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் பேரூந்து வழங்கப்படும் எனவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.