இங்கிரிய, போதினாகல யஹல வத்த பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக இருந்த 25 வயது பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (11) திடீரென உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தினுஷிக்கா தமயந்தி ஜயசிங்க என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, சமையலறையில் மயங்கிய நிலையில் மனைவி கிடப்பதைக் கண்டு, அவரை இங்கிரிய பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சமையலறையின் அருகில் உள்ள அறையில் சுவரில் இருந்து மின்சார பிளக் ஒன்று கழன்று வீழ்ந்து, உயிரிழந்த பெண்ணின் அருகில் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.