மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியிலிருந்து மக்களுடனேயே விடை பெற்றுச் சென்றார். அவர் மக்களின் விருப்பு வாக்குடனேயே மீண்டும் வருவார். இவ்வாறு,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்காக கொழும்பில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது அநாவசியமானது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். வீழ்ச்சியடைந்துள்ள நாடு மீண்டும் கட்டி யெழுப்பப்பட்டு வரும் நிலையில், போராட்டங்களை முன்னெடுத்தால், அது வீழ்ச்சியை நோக்கியே செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் கடும் பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதா ல், சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டுத் துறை மட்டுமன்றி நாட்டின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் போராட்டங்கள் மூலம் வீழ்ந்தது ராஜபக்ஷவோ ரணில் விக்கிரமசிங்கவோ அல்ல என்றும் முழு நாடும் வீழ்ச்சியடைந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, போராட்டத்தின் போது தமது வீட்டுக்கு வந்து நாய்க்குட்டியை திருடிச்சென்ற நபரை கைது செய்தமை போன்று, பாராளுமன்றத்திற்கு தீ வைப்பதற்கு முயற்சித்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியைக் கேட்டுள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)