(எம்.எம்.சில்வெஸ்டர்)
பெளத்த மதத்தை அகெளரவப்படுத்தும் வகையிலான கருத்தை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய என்பவர் எந்தவொரு கத்தோலிக்க பாடசாலை ஒன்றின் பழைய மாணவி அல்ல எனவும் அவ்வாறான கருத்தை, அவர் எந்தவொரு கத்தோலிக்க பாடசாலையில் வைத்து வெளியிடவில்லை.
இவ்வாறு உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடுவதை தவிர்க்குமாறு கத்தோலிக்க தனியார் பாடசாலையின் பொது முகாமையாளர் அருட் தந்தை கெமுனு டயஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையில் கருத்து வெளியிட்டு கைது செய்யப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரிய என்பவர் கத்தோலிக்க பாடசாலை ஒன்றின் பழைய மாணவி என்றும், குறித்த கருத்தை கத்தோலிக்க பாடசாலை ஒன்றின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வுன்றிலேயே வெளியிட்டிருந்ததாகவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது.
எங்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி, நடாஷா எதிரிசூரிய என்பவர், கொழும்பு - 03 இல் உள்ள பிஷப் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பெளத்த மதத்தையும் புத்த பெருமானையும் அகெளரவப்படுத்தும் வகையில், நடாஷா எதிரிசூரிய வெளியிட்ட கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறான கருத்துகள், நாட்டின் இன மற்றும் மத ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாகும். இவ்வாறு, இனங்களுக்கிடையிலான மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு எவரேனும் ஒருவர் ஈடுபடுவாராகில் அது கண்டிக்கத்தக்க விடயமாகும் " என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.