மலையக மக்களது ஒழுங்கமைக்கப்படாத வேலைகளினால் ஏற்படும் பாதிப்புகள்.
கொழும்பு மற்றும் நகர்ப்புறங்களில் மலையகத்திலிருந்து வேலைக்கு வருகின்ற ஆண்கள் மற்றும் பெண்கள் முறையாக ஒழுங்கமைக்கப்படாத ஒரு தொழித்துறைக்குள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்த ஒழுங்கமைக்கப்படாத தொழிற்துறை என்ற அடிப்படையில் அதற்கான பாதுகாப்பு அல்லது அது தொடர்பான தகவல்களை பெற முடியாத ஒரு துர்பாக்கியமான நிலையை பல காலமாக இந்த தொழிலார்களும் இந்த மலையக மக்களும் அனுபவித்து வருகின்றனர்.
இதனால் இன்று அவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பது மட்டுமில்லாமல் இவ்வாறான துர்மரணங்களுக்கும் ஆளாகி விடுகின்றார்கள். இவற்றை ஒழுங்கமைக்கின்ற ஒரு செயற்பாடு முறையாக பல ஆண்டுகளாக செய்யப்படவில்லை. அதுவே இவ்வாறான பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது.
மலையகத்தில் அவர்கள் உரிய ஊதியம் கொடுக்காத காரணத்தால் தான் அவர்கள் மலையகத்தை தாண்டி வந்து இவ்வாறான தொழில்களை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது என்ற விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்கிறவர்களுக்கு கூட உரிய பாதுகாப்பு முறையோ ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்முறையோ உருவாக்கப்படவில்லை.
இது தொடர்பாக பேசுகின்ற அரசியல்வாதிகளோ அமைப்புகளோ உண்மையில் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இவ்வாறான பிரச்சனைகள் வரும் பொது அதை பற்றி பேசிவிட்டு அமைதியாகிவிடுவார்கள். அதன் பின்னர் இது வெறும் செய்தியாக மட்டுமே வளம் வருகின்றது. மலையகம் சார்ந்த அமைப்புகள், தொழிலுக்காக நகர் புறங்களுக்கு வருவோரை, தொழித்துறையை ஒழுங்கமைக்கும் ஒரு கட்டமைப்பினை உருவாக்கி அதன் மூலம் அவர்களை உள்வாங்குவதன் ஊடாக இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியும். அவர்கள் செய்யும் தொழில் அதன் அமைவிட விபரங்கள் தொடர்பில் தகவலறிய முடியும் என நாம் இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்
எனவே இதனை கருத்திற்கொண்டு மலையகம் சார்ந்த அரசியல் வாதிகள், மலையகம் தொடர்பில் பேசுகின்ற அரசியல்வாதிகள், இல்லையெனில் அமைப்புகளாக இருக்கலாம் அவர்கள் இதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பாகிய நாங்களும் பல்வேறு மலையக அமைப்புகளிடம் இது பற்றி பேசி இருக்கின்றோம். தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கின்றோம். அவர்களே இதனை உருவாக்குவதற்கான ஒரு செயற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் ஆகவே ஒரு ஒழுங்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் மட்டுமே நகர்ப்புறங்களில் வேலைக்கு வரும் இளைஞர் யுவதிகளை பாதுகாக்கும் சிறந்த வழியாக அமையும்.
-விநாயகமூர்த்தி ஜனகன்
தலைவர்,
தேசிய ஒருமைப்பாட்டு முன்னணி.