நீர்கொழும்பு பலகத்துறை பகுதியில் இளைஞனின் சடலமொன்று கரை ஒதுங்கி உள்ளது.
அப்புதளை, பிளக்வுட் ஸ்டேட் பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய திருமணமாகாத இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரன் என்ற இளைஞரே சடலமாக கரை ஒதுங்கி உள்ளார்.
இவர் செவ்வாய்க்கிழமை 16 ஆம் திகதி பகல் 3 மணியளவில் மூன்று நண்பர்களுடன் நீர்கொழும்பு பீச் பார்க் பகுதியில் உள்ள கடல்பகுதியில் குளிக்க சென்ற நிலையில் அலைகளினால் அடித்து செல்லப்பட்டு காணாமல்போன நிலையில், சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.
இவரது சடலம் பலகத்துறை கடல் பகுதியில் கற்களுக்கிடையில் சிக்கிய நிலையில் புதன்கிழமை (17) மாலை 5 மணி அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் நீர் கொழும்பு பெரியமுல்ல பகுதியில் ஹோட்டல் ஒன்றில் சமையல்காரராக தொழில் செய்பவர் ஆவார்.
இன்று பகல் கொச்சிக்கடை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதேவேளை, புதன்கிழமை (17) மாலையில் இருந்து வியாழக்கிழமை (18) பிற்பகல் இரண்டு முப்பது மணி வரை சடலத்தை மீட்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இறந்தவருடைய உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.