Our Feeds


Thursday, May 11, 2023

News Editor

காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்ளை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்பு


 நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார்.


காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


காலணித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட காணிச் சட்டங்களே இன்றும் நடைமுறையில் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காணி பயன்பாடுகள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பொறுத்தமற்றதாக காணப்படுகிறது என்றும் தெரித்தார்.


அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் காணப்படுகின்ற சிக்கல்களை நீக்கி புதிய தேசிய காணிக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இங்கு தீர்க்கமாக ஆராயப்பட்டது.


அதற்காக காணி ஆணைக்குழுவின் ஊடாக மாகாண சபை காணிகள் தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறும், கிராம சேவகர் பிரிவுகள் மட்டத்தில் காணப்படுகின்ற காணி உரிமையாளர்களின் விவரம் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள காணிகள் மற்றும் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற காணிகள் தொடர்பில் கண்டறிந்து பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 


அரசாங்கத்தின் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற காணிகளை உரிமையாளர்களுக்கு மீளக் கையளிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும், எதிர்காலத்தில் அரசாங்கத்தின் தேவைகளுக்காக காணிகளை கையகப்படுத்தும் போது  சந்தை பெறுமதியை செலுத்தி அவற்றை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 


இதன்போது நில அளவைத் திணைக்களம் மற்றும் விலை மதிப்பீட்டுத் திணைக்களங்களில் காணப்படும் தாமதங்களை நிவர்திப்பதற்காக அவற்றின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். 


தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பி.ஹேரத் வன வளம் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சீ.எம்.ஹேரத், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யூ.டி.சி.ஜயலால், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பீ.எல்.ஏ.ஜே.தர்மகீர்த்தி ஆகியோர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் தென்மாகாண பிரதான செயலாளர்,வட மத்திய மாகாண பிரதான செயலாளர் ஆகியோர் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »