பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக கடந்த 9 ஆம் திகதி இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரை துணை இராணுவத்தினர் கைது செய்து இழுத்து சென்றனர்.
ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது. இதையடுத்து இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் வன்முறை ஏற்பட்டது.
இராணுவ வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் நாடு முழுவதும் பதற்றம் நிலவியது. போராட்டக்காரர்களுக்கு இராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்தது.
கைதை எதிர்த்து நீதிமன்றில் இம்ரான்கான் தரப்பில் முறையிடப்பட்டது. இதை விசாரணை செய்த நீதிமன்றம் இம்ரான்கான் கைது சட்டவிரோதம் என்றும், அவரை இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.
இதன்படி நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான்கானுக்கு 2 வாரம் பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். வன்முறையில் 74 பொலிஸ் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன.
பொலிஸ் நிலையங்கள் உட்பட 22 அரசாங்கம் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. 152 பொலிஸார் காயம் அடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வன்முறை தொடர்பாக 2800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.