கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தின் முஸ்லிம் விரோதப் போக்கு மிகுந்த கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரு மாகாணம் கிழக்கு மாகாணமாகும். இந்த மாகாண முஸ்லிம்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தினால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையைத் தருகின்றது.
கிழக்கு மாகாணசபையில் 5 அமைச்சுக்கள் காணப்படுகின்றன. கடந்த காலங்களின் இந்த அமைச்சுக்களின் செயலாளர்களாக எல்லா இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவோர் இருந்தனர். எனினும் தற்போது தகுதியுள்ளோர் இருந்தும் எந்தவொரு முஸ்லிம் அதிகாரியும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக இல்லை.
கிழக்கு மாகாண சபையில் பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் அதிகாரசபைகள் 5 இருக்கின்றன. கடந்த காலங்களில் இவற்றின் தவிசாளர்களாக எல்லா இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவோர் இருந்தனர். எனினும், தற்போது எந்தவொரு சபையிலும் முஸ்லிம் தவிசாளர்கள் இல்லை.
அதேபோல இந்த சபைகளின் செயலாளர் அல்லது பொது முகாமையாளர் பதவிகளில் கடந்த காலங்களில் எல்லா இன உத்தியோகத்தர்களும் இருந்தனர்.. தற்போது இவை எதிலும் முஸ்லிம் அதிகாரிகள் இல்லை.
கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளிகளில் சுமார் 40 வீதமானவை முஸ்லிம் முன் பள்ளிகள். எனினும் கிழக்கு மாகாண முன்பள்ளி பணிப்பாளர் சபையில் எந்தவொரு முஸ்லிம் உத்தியோகத்தரும் இல்லை.
இவை அனைத்தும் கிழக்கு மாகாண ஆளுநரால் செய்யப்படும் நியமனங்களாகும். கடந்த காலங்களில் இருந்த ஆளுநர்களால் சகல இனங்களையும் சமப் படுத்தும் நிலையில் நியமனங்கள் வழங்கப்பட்டன எனினும் தற்போதைய ஆளுநர் முஸ்லிம் விரோதப் போக்குடன் செயற்பட்டு முஸ்லிம் சமுகத்தைப் புறக்கணித்து வருகின்றார்.
கோத்தாபாய ராஜபக்ஸவின் இனவாதக் குழுவைச் சேர்ந்த இந்த ஆளுநர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியிலும் அதே இனவாத வழியிலேயே பயணிக்கிறார். இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இருந்தாலும் அவர்கள் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் அவர்கள் குறியாக இருக்கிறார்களே தவிர இவ்வாறான முஸ்லிம் உரிமைகள் விடயத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும்.
கிழக்கு மாகாணத்தின் ஒரே அமைச்சரான நஸீர் அஹ்மத் முஸ்லிம்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் கூடிப் பேச வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். அவராவது இந்த முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.