நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மல்வத்து பீடாதிபதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெரம் பெர்னாண்டோ வெளியிடும் அறிக்கைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால், உரிய கட்டளைச் சட்டங்கள் மூலம் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றார்.
ஏனைய மதங்கள் தொடர்பில் கடந்த வாரம் கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவருக்கு எதிராக பல தரப்பினர் நீதிமன்றத்திற்கு சென்றதுடன், குறித்த போதகர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்ற உத்தரவை பெற்றிருந்தாலும், அவர் அதற்கு முன்பாகவே நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று (21) சிங்கப்பூரில் இருந்து அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், தமது கருத்துக்களால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.