Our Feeds


Thursday, May 4, 2023

ShortNews Admin

தையிட்டி போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி!



யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்களின் உரிமையை தடுக்க முடியாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


சட்டவிரோத விகாரைக்கு எதிராக நேற்று ஆரம்பித்த போராட்டத்திற்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்தியதுடன், போராட்டக்காரர்கள் 2 பேரையும், போராட்டக்களத்துக்கு பந்தல் அமைக்க வந்த 3 பேரையும் கைது செய்தனர்.


அத்துடன், போராட்டக்களத்திற்குள் மக்கள் நுழைய முடியாதவாறு தடுப்பு வேலிகள் அமைத்திருந்தனர்.


கைது செய்யப்பட்ட 5 பேரையும் பலாலி பொலிசார், மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ் ஆஜரானார்.


அமைதியான வழியில் போராட்டம் நடத்தியவர்களை பொலிசார் கைது செய்ததை சட்டத்தரணி சுட்டிக்காட்டியதையடுத்து, நீதவான் அவர்களை பிணையில் விடுவித்தார்.


விகாரைக்கு முன்பாக போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டுமென பொலிசார் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.


ஆனால், சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்த்து விட்டு உத்தரவு வழங்குவதாக நீதவான் குறிப்பிட்டார்.


அதன்படி , இன்று மாலை போராட்டக்களத்துக்கு வந்த நீதவான், நிலைமைகளை அவதானித்த பின்னர், மக்களின் அமைதியான போராட்டத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கினார்.


இதன்படி, விகாரைக்கு வருபவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல், விகாரையின் வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்காமல், வீதியை மறிக்காமல், ஒலி எழுப்பாமல், போராட அனுமதியளித்தார்.


அத்துடன், விகாரைக்கு எதிரில் உள்ள வளவில் போராட்டம் நடத்த நீதவான் இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.


விகாரையின் காணி உரிமம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் நீதிமன்றத்தை அணுகி நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதவானின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »