Our Feeds


Monday, May 15, 2023

News Editor

அவுஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கிய அன்பளிப்பு




 அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் – A32-673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விமானம் வழங்குவது தொடர்பாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O’Neil) அளித்த கடிதம், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டெபன் இனால், அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.


பீச் கிராப்ட் “KA350 King Air” என்பது நவீன இரட்டை எஞ்சின் கொண்ட turboprop விமானம் ஆகும்.


இந்த அன்பளிப்பு இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் திறனை மேம்படுத்தும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச குற்றச்செயல்களை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை இது உறுதிப்படுத்துவதுடன், கடல் மார்க்கமாக இடம்பெறும் மனிதக் கடத்தலை எதிர்க்கும் செயல்முறைக்கு பரந்த பங்களிப்பை வழங்க முடியும்.


கடல்சார் குற்றங்களுக்கு எதிராக இலங்கை வழங்கும் ஆதரவை அவுஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் பாராட்டுவதாகவும், ஆட்கடத்தல் செயல்பாடுகளை குறிப்பிடத்தக்க அளவில் மட்டுப்படுத்துவதற்கும், கடல் கொள்ளை மற்றும் பாதுகாப்பற்ற கடற் பிரயாணங்களிலிருந்து மக்களை பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இரு நாடுகளுக்கிடையேயான இந்த ஒத்துழைப்பு வேலைத்திட்டம், காரணமாக அமைந்துள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேற்படி விமான செயற்பாடுகள் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் 12 மாத காலம் இலங்கைக்கு உதவிகளை வழங்கவுள்ளதோடு, அதன் பின்னர் அதன் பொறுப்புக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும். அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர், முதன்மைச் செயலாளர் பிரெட் செஹண்டர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கேன் உள்ளிட்டவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »