தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய சந்திப்பில் தங்களது நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் சரித்திரப்பூர்வமாக வாழ்விடங்கள் என்ற அடிப்படைக்கு மாறாக எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடத் தாம் தயாராக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக குறிப்பிட்ட ஒரு கால எல்லைக்குள் ஆக்கப்பூர்வமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிப்பதற்கு தயாராகவுள்ளோம்.
வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் சரித்திரப்பூர்வமாக வாழ்விடங்கள் என்ற அடிப்படை சர்வதேச ரீதியாகவும், நாட்டுக்குள்ளேயும், இலங்கை - இந்திய ஒப்பந்தத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அலகாக உள்ளது.
அந்த அடிப்படைக்கு மாறாக எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதற்கு தயாராக இல்லை.
குறித்த அடிப்படையிலேயே இன்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.