உபேர்ட் ஏஞ்சல் அல்லது ஜெரோம் பெர்னாண்டோ ஆகிய போதகர்களை ஒருமுறை தான் சந்தித்துள்ளதாகவும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் காரியாலயத்தினால் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாகவே தாம் அவர்களை ஒருமுறை சந்தித்ததாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போதகர்களான உபேர்ட் ஏஞ்சல் மற்றும் ஜெரோம் பெர்னாண்டோ ஆகியோருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை தாம் கண்டிப்பதாகவும், இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை அல்லது வெறுப்பை ஏற்படுத்தும் இவ்வாறான கருத்துக்களுக்கு எமது நாட்டில் இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தான் பிரதமர் மற்றும் சமய விவகார அமைச்சர் பதவிகளை வகித்த போது உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொள்ளுமாறு தமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், நல்லுறவை வளர்க்கும் நோக்கிலும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் நோக்கிலும் சமய அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் மதத் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சந்தித்தேன்.
இரண்டு போதகர்களும் தனக்கும் தனது மனைவிக்கும் பிரார்த்தனை நடத்திய நட்புரீதியான சந்திப்பு இது என்றும் அது உத்தியோகபூர்வ சந்திப்பு என்பதால் புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாகவும், அதைத் தவிர அவர்களுடன் தனக்கு தனிப்பட்ட உறவு இல்லை என்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.