Our Feeds


Sunday, May 21, 2023

ShortNews Admin

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுவார் - சுதந்திரக் கட்சி அறிவிப்பு



(எம்.மனோசித்ரா)


எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவருக்கு ஆதரவளிக்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே களமிறக்கப்படுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி  தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் களமிறக்கப்பட்டாலும், தற்போது பாராளுமன்றத்தில் எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடம் அவருக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுதந்திர கட்சியிடம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுமா ? அல்லது சு.க. சார்பில் வேட்பாளர் ஒருவரை நியமிக்கும் எண்ணம் காணப்படுகிறதா என்று வினவிய போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுதந்திர கட்சி சார்பில் தான் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளார். இதுவரையில் அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. 

எதிர்க்கட்சி தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள போதிலும், அவருக்கு ஆதரவளிக்குமாறு இதுவரையில் எம்மிடம் எந்தவொரு கோரிக்கையோ அல்லது பேச்சுவார்த்தைக்கான அழைப்போ விடுக்கப்படவில்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »