லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை பிரித்தானியாவுக்கு பயணமானார்.
ஜனாதிபதியுடன் இரண்டு பணியாளர்களும் இதில் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
லண்டனின் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சனிக்கிழமை நடைபெறும் முடிசூட்டு விழாவில் அரச குடும்ப உறுப்பினர்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்வார்கள்.
1953 ஆம் ஆண்டு மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் சுமார் 8,200 பேர் கலந்து கொண்டனர்.
இந்த தடவை, மன்னர் சார்ள்ஸ் மற்றும் ராணி கமிலாவின் முடிசூட்டு விழாவைக் காண்பதற்கு 2,200 விருந்தினர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதில் ஒருவராக உள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்குப் பிறகு மன்னர் சார்ள்ஸ் அரியணை ஏறினார். அவர் பிரித்தானிய வரலாற்றில் மிகவும் பழமையான புதிய மன்னராக இடம்பிடித்தார்.
அப்போதிருந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முடிசூட்டு விழா, இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளதுடன், இதற்கான திட்டங்கள் ஒபரேஷன் கோல்டன் ஆர்ப் என்ற குறியீட்டு பெயரில் வெளியிடப்பட்டுள்ளன.