பிராந்தியப் பிரச்சினைகளைத் தீர்ப்பத்தில் அரபு நாடுகள் ஒற்றுமையாக செயற்படுவது அவசியம் என அரபு லீக் உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட ‘ஜெத்தா பிரகடனத்தில்’ கோரப்பட்டுள்ளது.
அத்துடன் அரபு லீக்கில் சிரியாவை மீண்டும் இணைத்தமைக்கும் இப்பிரகடனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
அரபு லீக்கின் 32ஆவது உச்சிமாநாடு சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இம்மாநாட்டின் இறுதியில் 'ஜெத்தா பிரகடனம்' வெளியிடப்பட்டது.
பலஸ்தீனப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரபு சமாதான முன்முயற்சிகளை இப்பிரகடனம் வலியுறுத்தியுள்ளது. சூடானில் பதற்றத்தை தணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. லெபனான் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்நாட்டு ஜனாதிபதியை இப்பிரகடனம் கோரியுள்ளது. யேமனில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு லீக் உச்சி மாநாட்டில் பங்குபற்றிய சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தை அரபு நாடுகளின் தலைவர்கள் வரவேற்றனர்.
சிரியாவில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகளையடுத்து, அரபு லீக்கிலிருந்து 2011ஆம் அண்டு சிரியா இடைநிறுத்தப்பட்டது. இம்மாதம் அரபு லீக்கில் சிரியா மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டது.
அரபு லீக்கில் சிரியா மீள சேர்க்கப்பட்டதை அமெரிக்கா விமர்சித்திருந்தது.
எனினும், அரபு லீக் செயலாளர் நாயகம் அஹ்மத் அபோல் கெய்த் இக்கரிசனைகளை நிராகரித்திருந்தார்.
இதேவேளை, சிரிய ஜனாதிபதி அஸாத்தின் அரசாங்கத்துடன் அரபு லீக் உறவுகளை சுமுகமாக்குவதற்கு எதிராக அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இட்லிப், அல் பாப், அஸாஸ், அப்ரின் முதலான நகரங்களில் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.