Our Feeds


Thursday, May 18, 2023

ShortNews Admin

இந்தியாவின், கர்நாடக மாநில அடுத்த முதல்வர், துணை முதல்வரை அறிவித்தது காங்கிரஸ்



இந்தியாவின் கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது.

 

இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்துப் பூர்வமாக கருத்து கேட்கப்பட்ட நிலையில், அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார்.

 

முதல்வர் பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார். இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுத்ததால் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.

 

தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது. கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் புதிய எம்.எல். ஏக்களுக்கான பதவியேற்பு விழா பெங்களூருவில் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறும் என நேற்று இரவு காங்கிரஸ் மேலிடம் தெரிவித்தது.

 

இன்று காலையில் அடுத்தகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சித்தராமையா அடுத்த முதல்வர் என்றும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. டி.கே.சிவக்குமார் மாநில தலைவராகவும் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 5 நாட்களாக நிலவி வந்த மூட்டுக்கட்டை நீங்கியது.

 

அடுத்து சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பதவியை பெற சில மூத்த தலைவர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அமைச்சர் பதவியை பெறுவதற்கு எம்.எல்.ஏ. க்களிடையே கடும் போட்டி இருப்பதால் குழப்பம் நிலவுகிறது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »