(லியோ நிரோஷ தர்ஷன்)
போரினால் ஏற்பட்ட அச்ச நிலை காரணமாக இடம்பெயர்ந்து பன்னாடுகளிலும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வர்த்தகங்களை முன்னெடுக்கவும், முதலீடுகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கு தேவையான ஒழுங்குகளை செய்யுமாறும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே இந்த விடயத்தை ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதன்போது ஜனாதிபதியிடம் கருத்துரைத்த ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார,
புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கையில் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைக்க விரும்புகின்றனர். எம்முடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினர்.
குறிப்பாக, ஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க புலம்பெயர் தமிழர்கள் ஆர்வமாக உள்ளனர். உண்மையில், அவர்கள், நெருக்கடியான இந்த நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராகவே உள்ளனர். சம்பிரதாயபூர்வமான தமிழ் அரசியல் கட்சிகள் மீது புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது நம்பிக்கை இல்லை. அவர்கள் அதனை விரும்பவும் இல்லை.
இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் வளமான மாற்றத்தையே புலம்பெயர் தமிழர்கள் விரும்புகின்றனர். வடக்கு, கிழக்கில் உள்ள இளையோரும் அதனையே கோருகின்றனர்.
எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வடக்குக்கு மீண்டும் செல்லவுள்ளேன். எனவே, இந்த நேரத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிப்பது சிறந்தது என்று நீண்ட விளக்கத்தை அளித்தார்.
இதற்கு மறுமொழியளித்து ஜனாதிபதி ரணில் கூறுகையில், புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அழையுங்கள். அவர்களுக்கு தேவையன ஒத்துழைப்புகளை வழங்குங்கள். அரசியலில் ஈடுபடும்போது, உலக அரசியல் போக்கை போன்று தேசிய அரசியல் நகர்வுகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யுங்கள். இது அனைவருக்கும் முக்கியமானது என கூறினார்.