கம்பளையில் காணாமல்போன நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பாத்திமா முனவ்வரா என்ற இளம் பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைகள் இன்று (14) இடம்பெற்று அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த பெண்ணின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை, இந்தப் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிகல்ல எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற 22 வயது யுவதியே கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காணாமல் போயிருந்தார்.
கெலி ஓயா நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் கடமையாற்றிவந்ததாகக் கூறப்படும் மேற்படி யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) காலை தனது தாயிடம் பஸ்ஸுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு தொழில் புரியும் இடத்துக்கு வீட்டிலிருந்து சென்ற நிலையில் அவர் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், யுவதியின் உடைமைகள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசம் பொலிஸ் பாதுகாப்பு வலயமாக ஆக்கப்பட்டு சடலத்தை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.