மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதன் காரணமாக வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (21) இரவு நாடு திரும்பவுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை தனது கட்டுநாயக்க மிராக்கள் டோம் மண்டபத்தில் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக போதகர் ஜெரோம் முன்னதாக அறிவித்திருந்த போதிலும் பின்னர் அதனை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜெரோம் பெர்னாண்டோவின் அறிக்கை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது, இது நாட்டில் பரபரப்பான தலைப்பாக மாறியது.
பிற மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரது வாக்குமூலங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளதுடன், அவரது சொத்துகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேவேளை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான கட்டுநாயக்கவில் இன்று ஆராதனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், பின்னர் அது இரத்துச் செய்யப்பட்டதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். எனினும், நேற்று (20) பிற்பகல் தெஹிவளையில் உள்ள விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டுக்கு வந்ததாக இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
போதகர் ஜெரோம் மலேசியாவில் இருந்து இன்று இரவு நாட்டுக்கு வரவுள்ளதாக விமான நிலைய தகவல் தரப்புகள் தெரிவித்தன.
எவ்வாறாயினும், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட பல தரப்பினரும் போதகர் ஜெரோம் நாட்டுக்கு வந்தவுடன் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுவருகின்றனர்.
அவ்வாறே, அவர் நாடு திரும்பும் பட்சத்தில் அவரை விமான நிலையத்திலேயே கைதுசெய்யமுடியும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.