களுத்துறை மகா வித்தியாலயத்துக்கு எதிரான பாடசாலையின் மாபெரும் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் களுத்துறை திஸ்ஸ கல்லூரி கிரிக்கெட் அணியின் உபதலைவர் தலையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்கொன விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற இரு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் முடிவில் மாணவர்களுக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
களுத்துறை மகா வித்தியாலயம் கடைசி ஓவரில் வெற்றி பெற்றதையடுத்து, இரு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் மைதானத்துக்குள் பிரவேசித்ததால் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மைதானத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோதலை கட்டுப்படுத்தியதாகவும் அதேவேளை, தாக்குதல் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தனது மகன் எதிர் பாடசாலை மாணவர்களால் தாக்கப்பட்டதாகவும், தனது பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவன் ஒருவரின் தாயார் பயாகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.