காலித் ரிஸ்வான்
2022ம் ஆண்டில் மாத்திரம் சுமார் 16.6 மில்லியன் வெளிநாட்டினர் சவூதி அரேபியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த சிறந்த நாடுகளில், உலக சுற்றுலா அமைப்பான WTO குறியீட்டில், 2019ம் ஆண்டில் 25வது இடத்தைப் பிடித்திருந்த சவுதி அரேபியா, 2022ம் ஆண்டில் 12 இடங்கள் முன்னேறி சவூதி உலகளவில் 13து இடத்தைப் பிடித்துள்ளது.
அனைத்து பயண நோக்கங்களுக்காகவும் சவூதி அரேபியாவுக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022 இல் 16.6 மில்லியனை எட்டியது என்று உலக சுற்றுலா அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பால் வெளியிடப்பட்ட 2023 க்கான WTB அறிக்கையின் படி, சர்வதேச சுற்றுலா வருவாய் குறியீட்டில் சவூதி அரேபியா 2022 இல் 11 வது இடத்தைப் பிடித்தது. 2019 இல் 27 வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
2023ம் ஆண்டின் முதல் காலாண்டில் பல்வேறு நோக்கங்களுக்காக சுமார் 7.8 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் சவூதி அரேபியாவுக்கு வந்து சென்றுள்ளனர், சுற்றுலாத் துறையில் சவூதி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதை இது தெளிவு படுத்துகிறது. இது 2019ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 64% அதிகமாகும், இது சுற்றுலாத் துறையின் அதிகபட்ச காலாண்டு செயல்திறனைப் பிரதிபலிக்கிறது.
உலக வர்த்தக அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களின் பட்டியலில் சவூதி அரேபியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல்-கதீப், சவூதி அரேபிய அரசாங்கத்தினதும், இரு புனிதத்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களதும் வழிகாட்டலானது சுற்றுலாத்துறையில் சவூதி அரேபியாவின் சாதனைக்கும், உலக சுற்றுலா துறையில் சவூதி அரேபியாவின் நிலையை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது என்று கூறியுள்ளார்.
பயண விசா ஒழுங்கு முறைகள், விளம்பரப் பிரச்சாரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் பன்முகத்தன்மை ஆகியவையும் இந்த சாதனைகளுக்கான பெரும் காரணங்களாக அமைந்தன எனவும் அவர் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியாவை உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்றும் நோக்கில், பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அனைத்து தரப்பினருடனும் அமைச்சு தனது நல்லுறவை புதுப்பித்துக் கொள்ளும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உலகப் பொருளாதார மன்றத்தால் (WEF) வெளியிடப்பட்ட சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டில் (TTDI) புதிய சாதனையை சவூதி அரேபியா நிகழ்த்தியுள்ளது, இது 2019ம் ஆண்டை விட பத்து தரவரிசைகள் முன்னேறி உலக அளவில் 33வது இடத்தைப் பிடித்துள்ளது.