Our Feeds


Tuesday, May 9, 2023

ShortNews Admin

முஸ்லிம் சமூக சவால்களை ஆவணங்களுடன் சென்று ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்க தலைவர்கள் முன்வாருங்கள் - அமைச்சர் ஹாபிஸ் நசீர் அழைப்பு



(ஊடகப்பிரிவு)


முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை  தீர்த்துவைக்கும் பொதுவான வரைபை தயாரிக்கும் தருணம் வந்துள்ளது. இனியும், தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாதென்பதே நிதர்சனமாகியுள்ளதாக அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 


சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முனைப்புடன் செயற்படுவதை நான் அறிவேன்.


எனவே, இழக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப்பெறவும், இதனுடன் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகள் குறித்தும் பொதுவான வரைபை தயாரிக்க வேண்டியுள்ளது. வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பறிபோன காணிகள் மற்றும்  கிழக்கில் திட்டமிட்டு விழுங்கப்பட்ட முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களைப் பெற  வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. இதற்கு அரசியல் தலைமையென்ற ரீதியில் நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் .


உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 சதவீதமான முஸ்லிம்கள் வாழ்கின்னறனர். இம்மாவட்டத்தில் மொத்தமாகவுள்ள 14 பிரதேச செயலகங்கள் பிரிவில், நான்கு பிரதேச செயலகங்களிலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இச்செயலகங்களில் வாழும்  முஸ்லிம்களுக்கு, 1.3 வீதமே காணிகளே உள்ளன. இவையும் திணிக்கப்பட்டே இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதே நிலைதான், அம்பாறை, திருமலை உட்பட வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் நிலவுகிறது.


இது தவிர, எல்லை நிர்ணய அறிக்கைகளிலும் சில சந்தேகங்கள், பாரிய ஆபத்துக்கள் உள்ளன. முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அல்லது அவர்களின் பெரும்பான்மை பலத்தை சிதைக்கும் வகையிலேயே இந்த அறிக்கை  உள்ளது. புதிய தேர்தல் முறையிலும் முஸ்லீம் சமூகம் பாதிக்கப்படாதவாறு  நாம் பணியாற்ற வேண்டியுள்ளது.


எனவேதான், முஸ்லிம் சமூகத்தின் இவ்வாறான சமகால சவால்கள் தொடர்பில் சமூகப் பிரதிநிதிகளிடம் ஒருமித்த கருத்து நிலவுவது அவசியம். இக்கருத்தொற்றுமையுடனும் போதிய ஆவணங்களுடனும்  முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும். இதற்காக, சகல முஸ்லிம் தலைமைகளும், எம்பிக்களும் தங்களது அரசியல் பேதங்களைப் புறந்தள்ளி ஒன்றுபடுமாறு அழைக்கிறேன். 


ஒற்றுமையில்தான், பொது வரைபை தயாரிக்கலாம். இந்த வரைபினால், சகோதர சமூகங்களையும் புரிந்துணர்வுக்கு கொண்டு வர முடியும். ஒரே தாய்மொழியினராகிய தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்தும் பிணக்குகளுக்குள் சிக்கியிருப்பது சிறுபான்மைச் சமூகங்களை ஈடேற்றாது என்பதையே வரலாறு உணர்த்தியிருப் பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »