சிறுபான்மை மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் வாழும் எல்லா மக்களுக்கும் ஆபத்தான பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் கைவிட வேண்டும் என கிழக்கு மாகாண முஸ்லிம் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுநிறுவனங்கள் கூட்டாக இணைந்து இன்று (14) காத்தான்குடியில் வைத்து பிரகடனம் செய்துள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் என்றாலே அது சிறுபான்மை மக்களை இலக்கு வைத்ததாகவே அமைந்துள்ளது என அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் ஒழுங்கமைத்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான விழிப்பூட்டல் கலந்துரையாடல் இன்று காத்தான்குடியில் இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் ஜனநாயகத்தையும், மக்களின் மனித உரிமையையும் கேள்விக்குட்படுத்தும் பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ரத்துசெய்யப்படவேண்டும் என்றும் இப்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல சிவில் சமூகமும் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்தில் உள்ளதாகவும் கடந்த காலங்களில் இந்த சட்டம் சிறுபான்மை சமூகத்தை கடுமையாக தாக்கியுள்ளது என்றும் இதனால் எமது நாட்டுக்கு பொருத்தமற்ற இந்த சட்டமூலம் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தை கோருகின்றோம்.
முஸ்லிங்கள் இந்த நாட்டுக்கு எப்போதும் விசுவாசமானவர்கள். இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியவர்கள் அந்த அடிப்படையில் பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக வெறுத்து எதிர்ப்பவர்கள். இந்த சட்டமூலம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கு பாரிய விளைவை உண்டுபண்ணுவது என்ற அடிப்படையிலும் ஜனநாயகத்தை சிதறடிக்கும் சட்டமென்றவகையில் இந்த சட்டமூலத்தை கைவிட நாங்கள் ஒன்றிணைந்து அரசை கோருகின்றோம் என்ற கருத்தை இங்கு பலரும் தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடலில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், சட்டத்தரணிகளான ஸ்வஸ்திகா அருணலிங்கம், ரணிதா மயூரன் ஆகியோர் இந்த சட்டமூலத்தை பற்றி விளக்கமளித்தனர். காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், அக்கரைப்பற்று ஜும்மா பெரியபள்ளிவாசல், சம்மாந்துறை மஜ்லிஸுர் சூரா ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், கல்குடா ஜம்மியத்துல் உலமா, மூதூர் மஜ்லிஸுர் சூரா, கிண்ணியா பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகள் மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை மாவட்ட ஜும்மா பள்ளிவாசல்கள், , பொதுநிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
நூருல் ஹுதா உமர்