(இராஜதுரை ஹஷான்)
தேசிய நல்லிணக்கத்துக்கும் மத சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் முரண்பட்ட கருத்துக்களை குறிப்பிடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் புத்தசாசன அமைச்சு கொண்டு வரவுள்ள புதிய சட்டத் திருத்தத்துக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (31) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் குற்றஞ்சாட்டவில்லை.போராட்டக்களத்தின் ஆரம்பம் ஜனநாயகக் கொள்கையை அடிப்படையாக கொண்டிருந்தது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை போராட்டத்தில் வெளிப்பட்டது.
ஜனநாயக போராட்டக்களத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் ஆக்கிரமித்தார்கள்.போராட்டக்களத்தில் இராச்சியத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அரசியலமைப்பு,புத்தசாசனம் உட்பட மத கொள்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவை கிடையாது என்ற கருத்துக்கள் போராட்டக்களத்தில் குறிப்பிடப்பட்டன.
போராட்டக்களத்தின் முன்னிலை வகித்தவர்களில் பெரும்பாலானோர் புத்தசாசனத்தையும். பிற மதங்களையும் அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
பௌத்த மதத்ததை அவமதிக்கும் வகையிலான கருத்துக்கள் குறிப்பிடப்படுவது தற்போது தீவிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
தேசிய நல்லிணக்கத்துக்கும்,மத சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முரண்பட்ட கருத்துக்களை குறிப்பிடும் தரப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வர புத்தசாசன அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த சட்டத்திருத்தத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.