நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைய விருப்பம் இல்லை என ஜப்பான் பிரதமர் கிஷிடா தெரிவித்துள்ளார்.
நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு ஆகும். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட 12 நாடுகள் இணைந்து 1949 ஆம் ஆண்டு இந்த இராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கியது.
இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது தாக்குதல் நடந்தாலும் அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் இணைய வேண்டும்.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் உறுப்பினராகும் திட்டம் தங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவுக்கான ஜப்பானிய தூதர், நேட்டோவானது ஆசியாவிலேயே முதல் முறையாக ஆலோசனைகளை நடத்துவதற்கு, டோக்கியோவில் தொடர்பு அலுவலகத்தை (liaison office) நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது என கூறியுள்ளார்.
இதனையடுத்து, நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரதமர் கிஷிடா, தொடர்பு அலுவலகத்தை நிறுவுவது தொடர்பாக நேட்டோவில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் எனக்குத் தெரியாது, ஜப்பானில் அலுவலகத்தைத் திறக்கும் பாதுகாப்பு கூட்டணியின் திட்டத்தை ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால், தனது நாடு நேட்டோவில் உறுப்பினராகவோ அல்லது அரை உறுப்பினர் நாடாகவோ சேரும் திட்டம் தங்களுக்கு இல்லை என மேலும் தெரிவித்துள்ளார்.