ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே உட்பட எட்டு மாணவர்கள் நேற்று (19) மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நேற்று (18) இரவு களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அதன் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட 8 மாணவர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்தனர்.
இதன்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நேற்று இரவு களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு பேரணியாக கொழும்பு - கண்டி வீதியை நோக்கிச் செல்ல ஆரம்பித்ததுடன், அங்கு பொலிஸார் பலத்த பாதுகாப்புடன் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி - கொழும்பு பிரதான வீதியில் நுழைய முற்பட்ட போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.