இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் வரலாற்றை ஆராய்ந்து, அந்த ஆலயங்களை தொல்பொருள் அடையாளங்களாக பாதுகாப்பதற்கு தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
நகுலேஸ்வரம், திருகேதீச்சரம், திருகோணேச்சரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் (புராதன பெயர் சந்திரசேகரேஸ்வரம்), ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரம் உள்ளிட்ட சிவாலயங்கள் தொடர்பில் ஆராய எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையிலுள்ள சிவாலயங்கள் குறித்து ஆராய்ந்து, அவற்றை தொல்பொருள் அடையாளங்களாக பாதுகாக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கையிலுள்ள சிவாலயங்கள் சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்கள் எனவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.
எனினும், நாடு பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் காரணமாக, சிவாலயங்களை பாதுகாப்பது தொடர்பான திட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு சர்வதேச ரீதியில் செயற்படும் இந்து அமைப்புக்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்களை வருகை தந்து, தம்முடன் கைக்கோர்க்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பகிரங்க அழைப்பு விடுக்கின்றார்.